கோயில் நகைகள் மாயம் – பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காணாமல்போன கோயில் நகைகளை மீட்பதற்கும், குறித்த பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *