பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது, கவனக்குறைவாக எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தில் அமர்ந்திருந்தாக கூறி, யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நேற்று (25.11.2024) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செயலமர்வின் போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
இதன்போது, அர்ச்சுனா, தனது செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவருக்கான நியமிக்கப்பட்ட ஆசனத்தில் அமரத் தீர்மானித்தமையினால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் “நான் எங்கே உட்கார வேண்டும் என்று கேட்டேன். எதிர்த்தரப்பில் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்று ஒருவர் குறிப்பிட்டார்.
அதனால், முன்பக்கம் சென்று அமர்ந்தேன். அத்துடன் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்று நினைத்தேன். பின்னர், நான்கு பேர் என்னை அணுகி, இது எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என தெரிவித்தனர்.
இதனை தவிர நான் அந்த நாற்காலியில் அமர எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. “எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக சமூக ஊடகங்களில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் என கூறப்படும் குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
நான் தெளிவுபடுத்துகிறேன், நான் வேண்டுமென்றே அல்லது எந்த தவறான நோக்கத்துடனும் அங்கு அமரவில்லை. எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி சுயேட்சையாகவே நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன்.
இருக்கை ஏற்பாடுகள் அல்லது நெறிமுறைகள் பற்றி எனக்குத் தெரியாது” என்று அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த தவறுக்காக நான் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் ஒருபோதும் அந்த நாற்காலியில் வேண்டுமென்றே உட்கார விரும்பவில்லை. மேலும், தவறான புரிதல் ஏற்பட்டதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply