காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்! நம்பிக்கையை இழந்த புதிய அமைச்சர்

போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான். இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.

தமது பிள்ளைகளை ஒரு சில அதிகாரிகளிடம் ஒப்படைத்த மக்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். இதன் பின்னணியை தேடிப்பார்க்கும் போது, அங்கும் முந்தைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

எனவே, 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்தவுடன் 14 அம்சக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். அதாவது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்து முழுமையான விசாரணைகள் ஊடாக உண்கைமளை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தோம்.

இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம். ஆனால் உளக் காயங்களுக்கு மருந்து போட இயலாது.

போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.