நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவை! அநுர மற்றும் விஜிதவிற்கு பலமான அமைச்சுக்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(18) தினம் பதவியேற்கவுள்ளது.

நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளடங்களாக தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை 50 பேரைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய பதவியேற்கவுள்ளதாகவும், விஜித ஹேரத்திற்கு ஒரு பலமான அமைச்சுப் பதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.