சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார்.

சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும்.

தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை.

போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது.

தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார்.

போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார்.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது.

சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது.

எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல.

இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது.

இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார்.

இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை.

இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது.

அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது.

இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு.

சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை.

அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார்.

அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது

முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார்.

சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது.

தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது.

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது.

1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மைத்திரிக்கு ஆதரவு
தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான்.

பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார்.

நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது.

மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார்.

சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை.

ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார்.

ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது.

அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

வடக்கு – கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார்.

நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல்.

புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார்.

இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார்.

சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது.

எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார்.

உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம்.

தென்னிலங்கை அரசியல்
சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான

இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம்.

சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார்.

கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார்.

மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம்.

மோடியின் அழைப்பு
இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன.

மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார்.

இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம்.

பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார்.

தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது.

மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார்.

இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம்.

பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார்.

தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது.என்பது குறிப்பிடத்தக்கது