டெல்லியில் நாடாளுமன்றம் முற்றுகை – பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி ‘ காக்ரோச் ஜனதா கட்சி’  நடத்திய பிரம்மாண்ட போராட்டப் பேரணி காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் (Neet) தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.  நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பியதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தை விட்டுப் புறப்பட்டார்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க மத்திய டெல்லி பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்  குவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு பலத்த அரண் அமைக்கப்பட்டுள்ளது. பேரணியாக வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும், தடியடி நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே மாதத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இந்தியாவின் கல்வி முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அதிருப்தியை மையமாகக் கொண்டு அண்மைக் காலங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.

இந்தப் போராட்டம்CJP-க்கு ஆதரவாக 20 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது.

இதற்கிடையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மத்திய டெல்லியின் சில பகுதிகளில் அமலில் இருந்த தடையுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பியதால் அவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்றப்பகுதி பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *