வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முறைப்பாடு பதிவு
குறித்த ஊடக சந்திப்பில், சுகாதார பணிப்பாளரிடம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் சிலர் புதிதாக பதவியேற்ற பொறுப்பு வைத்தியர் அர்சுனா மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார் நடவடிக்கை எடுத்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் அளித்த பணிப்பாளர் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை இடை நிறுத்தும் ஏற்பாடுகள் ஏதேனும் இடம்பெற்றதா எனக் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் கூறாமல் மத்தியில் இருந்து விசாரணை குழு குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.