வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த 19 ஆம் திகதி அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சாச் செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான லக்ஸ்மன், சமீர, ஆரிப்தீன், மனோஜ், ராஜபக்ஸ, பொலிஸ் உத்தியோகத்தர்களான வாசுல, விஜிதரன் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க அடங்கிய பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரைக் கைது செய்தனர்.

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டிருந்த கஞ்சாச் செடிகளைப் பிடுங்கிய பொலிஸார், அவற்றைச் சான்றுப் பொருட்களாகக் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *