உலக வசூலில் புது சாதனை படைத்தது ‘தி ஒடிசி’!

கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டமான திரைப்படமான ‘தி ஒடிசி’ (The Odyssey), வெற்றிகர திரையரங்க பயணத்தில் மற்றொரு சாதனை படைத்துள்ளது.

‘வெரைட்டி’ இதழின் தகவலின்படி, இப்படம் உலகம் முழுவதும் 1.352 பில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து, இதுவரை வெளியான ‘ஆர்-ரேட்டட்’ (R-rated – பெரியவர்களுக்கானது) திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது.

இதன் மூலம், 2024 இல் வெளியான ‘டெட் பூல் & வோல்வரின்’ திரைப்படம் ஈட்டிய 1.338 பில்லியன் டொலர் என்ற சாதனையை இது முறியடித்துள்ளது.

ஜூலை 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான ‘தி ஒடிஸி’, தனது உள்நாட்டு தொடக்க வெளியீட்டிலேயே 123 மில்லியன் டொலர் வசூலித்து அசத்தியது. அதன்பிறகு, இப்படம் உள்நாட்டில் 516 மில்லியன் டொலரும், சர்வதேச அளவில் 835 மில்லியன் டொலரும் வசூலித்துள்ளது.

‘டெட் பூல்’ நட்சத்திரமான ரியான் ரெனால்ட்ஸ் இந்த மைல்கல்லை சமூக ஊடகங்களில் கொண்டாடினார். அவர், “எக்காலத்திலும் அதிக வசூல் செய்த ‘ஆர்-ரேட்டட்’ திரைப்படமாக மாறியுள்ள ‘தி ஒடிசி’ படத்தின் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகச்சிறப்பான சாதனை,” என்று பதிவிட்டார்.

நோலனின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாக ‘தி ஒடிசி’ மாறிய சில நாட்களிலேயே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. மேலும், மேட் டாமன், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோரின் தனிப்பட்ட திரைப்பயணங்களிலும் அதிக வசூல் செய்த படமாக இது அமைந்துள்ளது.

ஹோமரின் பண்டைய கிரேக்க காவியத்தை அடிப்படையாக கொண்ட இப்படம், ட்ரோஜன் போருக்கு பிறகு மன்னர் ஒடிசியஸ் (மேட் டாமன்) தனது மனைவி பெனிலோப் (ஆன் ஹாத்வே) மற்றும் மகன் டெலிமாக்கஸ் (டாம் ஹாலண்ட்) ஆகியோருடன் மீண்டும் இணைய மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை விவரிக்கிறது; இப்பயணத்தில் அவர் புராண காலத்து உயிரினங்களுடன் மோதும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தில் ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான், லுபிடா நியாங்கோ, ஜான் லெகுயிசாமோ, எலியட் பேஜ், மியா கோத், கோரி ஹாக்கின்ஸ், ஜான் பெர்ன்தால், சமந்தா மார்டன், டிராவிஸ் ஸ்காட் மற்றும் பென்னி சாஃப்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *