போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி: பொலிஸார் எச்சரிக்கை!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Gov Pay’ அமைப்பைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தகவல்களைத் திருடும் புதிய மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links) எஸ்.எம்.எஸ் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த இணைப்புகளைச் சொடுக்கும் பயனாளர்களின் வங்கித் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் தந்திரமாகத் திருடப்பட்டு, கணக்கிலுள்ள பணமும் கொள்ளையடிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும், நிதிச் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் போக்குவரத்து அபராதங்களை இணைய வழியில் செலுத்தும் ‘Gov Pay’ நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தியே தற்போதைய மோசடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

‘Gov Pay’ சேவையைப் பயன்படுத்துவதற்கு வேறு எந்தவொரு அதிகாரப்பூர்வமற்ற இணையதளமோ அல்லது குறுஞ்செய்தி இணைப்புகளோ கிடையாது என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். எனவே, சந்தேகத்திற்குரிய இணைப்புகளைச் சொடுக்கி இதுபோன்ற நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *