போராட்டங்கள் நடத்தத் தடை.. அது மக்களாட்சிக்கானது.. வித்தியாசமான காரணம் கூறும் தாலிபான்!!

ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, தலிபான் நீதித்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஷுர்தா சட்டம்’ (Shurta Law) இயற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வால் (Hibatullah Akhundzada) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்தின் 50-வது பிரிவில், “ஆப்கானிஸ்தான் முழுவதும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டிருந்தன.

ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்குப் பிறகு அந்நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, தலிபான் ஆட்சியில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. இந்தச்சூழலில் தான், செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், போராட்டங்கள், ஜனநாயகம் அல்லது குடியரசு போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்தவை. மேலும், போராட்டங்கள் நாட்டில் குழப்பத்தையும் பாதுகாப்பு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே நேரத்தில், தலிபான் அரசு தனது நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டே இருப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மக்களுக்கு ஒன்று தேவை எனும் போது அரசை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இஸ்லாமிய சட்டத்தைக் காரணமாக கூறி தாலிபான் அரசாங்கம் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழலை மேலும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *