பேபி பவுடர் புற்றுநோய் குற்றச்சாட்டு வழக்குகள் : 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஜொன்சன் ரூ ஜொன்சன்!

ஜொன்சன் ரூ ஜொன்சன் (Johnson & Johnson) நிறுவனம் தனது பேபி பவுடர் மற்றும் டால்கம் தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் Ovarian Cancer) ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள சுமார் 69,000 வழக்குகளில், 95 சதவீதத்திற்கும் அதிகமான மனுதாரர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

J&J நிறுவனத்தின் டால்க் (Talc) அடிப்படையிலான பேபி பவுடர் பயன்பாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

எனினும், தனது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், அவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் Johnson & Johnson நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

எனினும், இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறுவனம் 2020ஆம் ஆண்டு அமெரிக்க சந்தையில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்தியதுடன், 2023ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியிலும் அதன் விற்பனையை முழுமையாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *