இந்திய ரெப் பாடகர் அறிவு கைது

பிரபல தமிழ் ரெப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நீட் (Neet) தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடகர் அறிவு தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, குண்டுக்கட்டாகக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், உடனடியாக அதிகாரிகளை அனுப்பி அறிவை தலைமைச் செயலகத்திலுள்ள தனது அறைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரால் அழைத்து வரப்பட்ட பாடகர் அறிவு, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நீட் தேர்வு தொடர்பான தனது கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்துப் பேசினார்.

சந்திப்பு முடிந்த பின்னர், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  அறிவின் தோள் மீது கைபோட்டபடி, அவரைப் பாதுகாப்பாக காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அறிவு பதிலளிக்காமல் சென்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிவின் குரல் மாணவர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகக் கூறி அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.’என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் விஜய் நடித்த திரைப்படப் பாடல்களைப் பாடிய அறிவு, தவெக அரசின் காவல்துறை மூலமாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் முதலமைச்சரைச் சந்தித்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *