இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகளுக்காக கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
இலங்கைத் தூதுக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தலைமைதாங்கினார்.
இந்திய பாராளுமன்றத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதன் நிர்வாகச் செயன்முறைகள் மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் பணிகள் தொடர்பில் இலங்கைத் தூதுக் குழுவினர் விரிவான அறிவைப் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் உறுப்பினர் சேவைகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் தொடர்பிலும் இக்குழுவினருக்கு சிறந்த அனுபவப் பகிர்வு கிடைக்கப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது பாராளுமன்றக் குழுக்களின் பங்கு, குழுச் செயலகங்களின் செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம், சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், இந்திய பாராளுமன்றத்தின் துறைசார் நிரந்தரக் குழு முறைமை, தலைமை தாங்கும் அதிகாரிகளின் வகிபாகம் மற்றும் அதிகாரங்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள், அத்துடன் பாராளுமன்ற செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.
இலங்கைத் தூதுக் குழுவினர் பாராளுமன்ற நூலகக் கட்டடம், லோக் சபா மற்றும் ராஜ்ஜ சபாவின் சபாமண்டபங்கள் மற்றும் பாராளுமன்ற வளாகத்தின் முக்கியவாய்ந்த இடங்களையும் நேரடியாகப் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியானது இலங்கை மற்றும் இந்திய பாராளுமன்றங்களுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக அமைந்தது.
Leave a Reply