பிலியந்தலயில் துப்பாக்கிச்சூடு!

பிலியந்தல, போகுந்தர பகுதியில் இன்று (19 ஜூலை 2026) காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொரலெஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் புகுந்த நால்வர், அங்கிருந்தவர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு பிலியந்தலை நோக்கி தப்பியுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பி ஓடுவது குறித்த தகவல் கிடைத்ததும், பிலியந்தல, போகுந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் மறைந்திருந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்கள் பொலிஸாரைக் கண்டு தப்பிக்க முயன்றபோது, பொலிஸார் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் பொலிஸ் அதிகாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், பின்னால் அமர்ந்திருந்தவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முற்பட்டுள்ளார்.

இதனால் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்காப்புக்காக தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டதில் பின்னால் இருந்த நபர் காயமடைந்து கீழே விழுந்தார். மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொரலெஸ்கமுவ வீட்டுத் தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்குள்ளான 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும், விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய மற்றைய சந்தேகநபர்களைக் கைது செய்ய பிலியந்தல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *