அநுர அரசினால் ஏற்படும் நெருக்கடி! மந்திராலோசனையில் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிலிண்டர் சின்னத்தில் ஆதரித்த உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துரையாடலுக்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் நலனுக்காக பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ராஜபக்சர்களை இலக்கு வைத்து சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்து இரண்டு வாரங்களுக்கு சிறையில் வைக்கப் போவதாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டன.

இந்நிலையில் தமது குடும்பத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யுமாறு நாமல் பகிரங்க சவால் விட்டிருந்தார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினம் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.