அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள்.
கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களின் மகத்தான வரலாற்று வெற்றிக்கு இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கனடிய தமிழர் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
இந்த கடிதத்தில், CTC தமிழ் கனடியர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு மாற்றத்தக்க ஆட்சிக்கான NPP இன் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த வெற்றி அமைந்துள்ளதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. CTC தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, வெளிப்படையான, பொறுப்புடைமை மற்றும் உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான NPP இன் உறுதிமொழியை நினைவூட்டியதுடன், மேலும் இந்த நிர்வாகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றிவிட்டு, ஜனநாயகத்திற்கும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு NPP முன் இருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை CTC யின் கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது. தேர்தல் அறிக்கையின் மூலம், நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்போது, அனைவருக்கும் நீதி, உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை CTC வலியுறுத்தியுள்ளது.
இந்த கடிதத்தில், CTC பின்வரும் முக்கியமான நடவடிக்கைகளை முன்மொழிந்திருக்கின்றது:
அரசியல் கைதிகளை விடுவித்தல்: எஞ்சியுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதன் மூலம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவது தேசிய நலன் மற்றும் ஒற்றுமைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்தல்: இந்தச் சட்டம் நீண்ட காலமாக சர்ச்சைக்கும் அநீதிக்கும் காரணமாக இருந்து வருகிறது. உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியளித்தபடி, அதை இரத்து செய்வது ஒரு நியாயமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும்.
காணி உரிமைகளை மீட்டெடுத்தல்: தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீள வழங்கப்படுவதுடன், சட்டவிரோத காணி சுவீகரிப்புகளை நிறுத்துவது நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நியாயமான உரிமைகளை ஆதரிப்பதற்கும் இன்றியமையாததாகும்.
மத உரிமைகளைப் பாதுகாத்தல்: வழிபாட்டுத் தலங்கள் மீதான அத்துமீறலைத் தடுப்பதன் மூலமும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை நிறுத்துவதன் மூலமும் தமிழர் வழிபாட்டு உரிமைகளை நிலைநாட்டுமாறு உங்கள் அரசை வலியுறுத்துகிறோம்.
13வது திருத்தத்தை அமுல்படுத்தி மாகாணசபைத் தேர்தலை நடாத்துதல்: புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படும் வரை, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் ஆகியவை பிராந்திய ஆளுகையை வலுப்படுத்துவதற்கும் உள்ளுராட்சிப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்குமான முக்கியமான நடவடிக்கைகளாகும்.
வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புத் துறையின் ஆதிக்கத்தைக் குறைத்தல்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் துறையைச் சீர்திருத்தம் செய்து, நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒத்துப்போகும் நிலைக்குக் கொண்டு வருதல். இராணுவத்தால் நடத்தப்படும் பண்ணைகள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் போன்ற வணிக நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு உள்ளூர் நிறுவனங்களை முடக்குகிறது. உள்ளூர் வணிகங்கள் மற்றும் விவசாயிகள் நியாயமான முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க இந்த முயற்சிகளை நிறுத்துமாறு உங்கள் அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்த நடவடிக்கைகள் NPP யின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள நேர்மையை வெளிப்படுத்துவது மட்டுமன்றி மிகவும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்கான அடித்தளத்தை அமைக்கும் என CTC தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. NPP க்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சமூகத்தினரிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இந்தப் பிரச்சினைகளில் விரைவாகச் செயல்படுமாறு CTC அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க கனடிய தமிழர் பேரவை தயாராக உள்ளது. இந்த புதிய ஆட்சியில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.
Leave a Reply