ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.
ஆயினும் இதுவரை ஹமாஸ் அமைப்பு எவ்வித அறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலியப் படையினரால் யஹ்யா சின்வார் நேற்று (17) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளைக்காரர்’ யஹ்யா சின்வார் என அவர் வர்ணித்துள்ளார்.
இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள நிலையில், இவ்வாறான கருத்து நகைப்புக்குரியது என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய இராணுவ மற்றும் தார்மீக சாதனை எனவும், ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சின்வாரைக் கொன்றது பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பைத் ஏற்படுத்தியுள்ளதாகவும், இது காசாவில் ஹமாஸ், மற்றும் ஈரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று யதார்த்தத்திற்கு வழி வகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யஹ்யா சின்வார் காசாவில் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பில் தாம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னர், கடந்த ஓகஸ்ட் மாதம், யஹ்யா சின்வார் அதன் தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply