ஈராக்கில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழுவால் 2014 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட யாசிதி பெண் ஒருவர் 21 வயதில் காசாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ஈராக், இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை மூலமே அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.
ஈரான் மற்றும் சிரிய நிலப்பகுதிகளை ஐ.எஸ். குழு ஆக்கிரமித்தபோது அங்குள்ள சிறுபான்மை யாசிதி மக்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டதோடு பலரும் கொல்லப்பட்டனர்.
அப்போது 11 வயது சிறுமியாக இருந்த இந்தப் பெண் ஐ.எஸ். குழுவால் பிடிக்கப்பட்டு பின்னர் காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நான்கு மாத முயற்சிக்குப் பின்னர் அந்தப் பெண் மீட்கப்பட்டதாக ஈராக் வெளியுறவு அமைச்சின் தலைமை அதிகாரி சில்வான் சிஞ்சாரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஜோர்தானின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
‘ஈராக் திரும்பிய அந்த யுவதி அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என்று ஈராக் வெளியுறவு அமைச்சு கடந்த வியாழனன்று கூறியது. இதில் இந்தப் பெண்ணை பிடித்து வைத்திருந்தவர் அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்தே அவரால் தப்பி வர முடிந்திருப்பதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டது.
இந்தப் பெண்ணுடன் ஈராக் பல மாதங்களாக தொடர்பை ஏற்படுத்திய நிலையில் அது பற்றி அமெரிக்காவிடம் தகவல் வழங்கிய நிலையிலேயே அவர் மீட்டுவரப்பட்டுள்ளார். ஈராக் மற்றும் இஸ்ரேல் இடையே எந்த ஒரு இராஜதந்திர உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply