மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயின் மரணத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று (3) மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறிப்பாக அண்மையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற பட்டதாரியான இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் நடைபெறும் விசாரணைகள் பக்கச் சார் பற்றதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என மன்னார் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்த இளம் தாயின் உடற்கூற்று பரிசோதனை கொழும்பில் நடைபெறுவதாகவும் அதற்குரிய முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அந்த உடற்கூற்று பரிசோதனை முடிவுகளை பொறுத்தே சட்ட நடவடிக்கைக்கு செல்வது தொடர்பாக முடிவெடுக்க முடியும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளரினால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply