கொட்டும் மழைக்கு மத்தியிலும்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டமாக இன்று (04.07.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆணி மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது
இந்நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி தொடர்பான வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமை காரணமாக வழக்கு விசாணைகள் தவணையிடப்பட்டிருந்தது
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு தொடர்பான வழக்கு 16.06.2024 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இந்நிலையில், அகழ்வு பணியினை நடாத்த நிதி கிடைக்கபெற்றதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் அவர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, பேராசிரியர் ராஜ் சோமதேவ, காணாமல் போனோர் பணியக தலைவர்உள்ளிட்ட சட்டத்தரணிகள், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர்,வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட அனைவரும் கலந்துரையாடி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்
இன்று மூன்றாம் கட்டமாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரை காலமும் போதிய நிதி ஒதுக்கீடு இன்மை காரணமாக காலம் தாழ்த்தப்பட்ட அகழ்வு பணியானது போதிய நிதி ஒதுக்கீட்டின் பின்னர் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 40 மனித எலும்புகூட்டுத்தொகுதிகள் முற்றாகவும் பகுதியாகவும் மீட்கப்பட்ட நிலையில் இப்பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் இதுவரை அகழப்படாத பகுதி மனித எலும்புகூட்டுத்தொகுதிகள் இருக்கும் என்று சந்தேகிக்கின்ற பகுதி துப்பரவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு, இரண்டாம் கட்ட அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து, குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.
அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply