சம்பந்தன் அவர்களின் உடலம் பாராளுமன்றில் வைக்கப்பட்டு யாழ் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம்

இன்று மூன்று மணியளவில் பாராளுமன்றில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு

இரா.சம்பந்தனின் உடல் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடல் அங்கு தந்தை செல்வா அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக சம்பந்தனின் உடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது உடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின்

உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வடக்கிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தனின் குடும்பத்தாருடனும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் வைத்து உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அதனையடுத்து, கொழும்பில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்ட்டு பின்னர் இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் இடம்பெறும் என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கிளிநொச்சி மண்ணிலும் சம்பந்தன் ஐயாவிற்கான இறுதி வணக்க அஞ்சலி நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவகத்திலும் நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறலாம் என என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கிளிநொச்சி மற்றும் வடக்கு மாகாணம் தழுவிய தமிழ் மக்கள் சம்பந்தன் ஐயாவிற்கு தமது அஞ்சலிகளை செலுத்த தயாராகுமாறு அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அவரது குடும்பத்தாருடன் தான் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இது குறித்து சம்பந்தனின் மகன்கள் மற்றும் மகளுடன் தான் கலந்துரையாடியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை தான் முன்னெடுத்துள்ளதாகவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.