உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல்
Tavaseelan news reporter
உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (27)
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையில் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விளக்கத்தினை வழங்கவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்கான கலந்துரையாடல்கள் நேற்று(27) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்திலும் கரைத்துறைபற்று பிரதேச செயலக மண்டபத்திலும் மூன்று அமர்வுகளாக நடைபெற்றன.
இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
1983 – 2009 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்குப் பின்னரான இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாகப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இதன் ஒரு அங்கமாக ஒரு கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்)சி.குணபாலன்,திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது
அடுத்த கலந்துரையாடல் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், முன்னாள் போராளிகள், உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது..
அடுத்த கலந்துரையாடல் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது
இங்கு, நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உத்தேச சட்டமூலம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலில் இணைந்திருந்த நபர்கள் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் முன்வைப்பதற்கான வழிவகை தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.
இந்த சந்திப்புக்களில் ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரிய ரட்ண, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரனி அசங்க குணவன்ச, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (கொள்கை) கலாநிதி சி.வை.தங்கராசா, சரத் கொத்தலாவல விரிவுரையாளர் ஆசிப் போர்ட், சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (சட்டங்கள்) வை.எல். லொக்குநாரங்கொட, நிறைவேற்று அதிகாரி (பொது மக்கள் தொடர்பு ) சௌமியா விக்ரமசிங்க மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply