அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ,  நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் நீங்க இப்போதைக்கு வரவேண்டாம் என்று கேட்டை சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்னையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.

நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *