கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது

சென்னை அடையாறு பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

எனினும் காவல்நிலைய பிணையில் உடனடியாக செல்ல அனுமதித்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகர் குறித்த வங்கிக் கிளை செயற்பட்டு வருகிறது.

அந்தக் கட்டிடத்தில் இருந்த மின்தூக்கி நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அதை சீரமைக்கும்படி கட்டிட உரிமையாளரான கயல்விழியை வங்கி நிர்வாகம் பலமுறை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கயல்விழி தரப்பு குறித்த மின்தூக்கியை சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, வங்கிக் கிளை முகாமையாளர் நேரடியாக கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் பேசியபோது, ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி முகாமையாளரின் கன்னத்தில் அறைந்ததாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சாஸ்திரி நகர் காவல்துறையினர் நேற்று காவல்நிலையத்துக்கு வந்த கயல்விழியை கைது செய்து விசாரணையின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *