கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,405 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய பரவலுக்கு மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வகைகளில் மிகவும் அரிதான ‘புந்திபுகியோ’ (Bundibugyo) வகை வைரஸே காரணமாகும். இந்த குறிப்பிட்ட வகைக்கு உலகளாவிய ரீதியில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை.

இது நோய் தடுப்புப் பணிகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் அண்டை நாடான உகாண்டா மற்றும் லைபீரியா போன்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால், அமெரிக்கா உட்பட பல நாடுகள் விமான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கொங்கோவின் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆயுத மோதல்கள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக சுகாதார ஊழியர்கள் பெருந்தொற்று பரவியுள்ள பகுதிகளைச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அங்குள்ள சுகாதார மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பு  மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகள் இணைந்து கொங்கோ அரசாங்கத்துடன் இந்த கொடிய நோய் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அவசரமாக உருவாக்கியுள்ள பரிசோதனைத் தடுப்பூசி முதன்முறையாகத் தன்னார்வலர்களுக்குச் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *