‘கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் – பிரதியமைச்சர்

மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் ‘கண்ணிருந்தும் குருடர்களாக’ உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன என்று கேட்பவர்கள் நேரில் வந்து பார்வையிடுமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் இன்று (27) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையக இளைஞர்களை தொழில் உலகிற்கு தயார்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் முழு நிதி ஒதுக்கீட்டில் இயங்கும் (TVTC) பயிற்சி நிலையத்தின் வாய்ப்புகளை மலையக இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே முழுமையாக தமிழ்மொழியில் இயங்கும் ஒரே தொழிற்பயிற்சி நிலையம் இதுவெனக் குறிப்பிட்ட அவர், ஆறு மாத பயிற்சி, தங்குமிடம் மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகளுடன் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முழு நிதிப் பங்களிப்பில் 392 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கபரகலை பகுதி மக்களுக்கான புதிய வீடுகளும் விரைவில் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அரசியலை இளைஞர்கள் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், மலையக மக்களின் எதிர்கால அரசியல் தலைமையை மலையக இளைஞர்களே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *