பங்களாதேஷ் ஜனாதிபதி பதவி விலக தீர்மானம்!

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் பங்களாதேஷ் திரும்ப ஆயத்தமாகி வரும் சூழலில், நாட்டின் ஜனாதிபதியும் அவரது நீண்டகால அரசியல் நண்பருமான முகமது ஷஹாபுதீன் தனது பதவியை இராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு அந்நாட்டில் வெடித்த தீவிர மாணவர் போராட்டங்களின்போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொடூர குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தன் மீதான வழக்குகளைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்காகத் தான் விரைவில் பங்களாதேஷ் திரும்பவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஹசீனா உறுதிப்படுத்தியிருந்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஜனாதிபதியின் திடீர் இராஜிநாமா குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது மருத்துவச் சிகிச்சைக்காகத் தாய்லாந்து சென்றுள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது நாடு திரும்பியவுடன், ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது அதிகாரப்பூர்வ இராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடமிருந்து ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டு வரும் கடுமையான அரசியல் அழுத்தமே இந்தத் திடீர் முடிவுக்கு முக்கிய பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ஹசீனாவின் மீள் வருகை அறிவிப்பும், ஜனாதிபதியின் இராஜிநாமா முடிவும் பங்களாதேஷின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *