இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசியை, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட இரண்டு ஊசிகளாக இது செலுத்தப்படுகிறது.

உலக அளவில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளதுடன், அங்கு டெங்குவின் 4 வகைகளும் பரவி வருகின்றன.

இந்நிலையில், தாகேடாவின் சர்வதேச அளவிலான மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், நான்கு வகை டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் தகுதிச்சான்றைப் பெற்றுள்ள கியூடெங்கா தடுப்பூசி, 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் 43 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டு, 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *