மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்-பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு-கனிய மணல் அகழ்வுக்கு பொது அமைப்புகள் கடும் எதிர்ப்பு

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான்,
து.ரவிகரன், பா. சத்தியலிங்கம்.,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முத்து முஹமட்
ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் கடற்படை,அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வு குறித்து கலந்துரையாடப்பட்டது.எனினும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதி நிதி ஆகியோர் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு,மன்னார் மாவட்ட மக்கள் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கணிய மணல் அகழ்வை எதிர்ப்பதாகவும் குறித்த விடையம் தொடர்பாக இங்கு ஆராயப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்ததோடு,மன்னார் தீவில் கனிம மண் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதியை வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது மக்களின் எதிர்ப்பை மீறி மாவட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அனுமதி வழங்க முடியாது என்றும்,குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கனிம மண் அகழ்வு குறித்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மையினால் இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடையம் தொடர்பாக கலந்துரையாட வேண்டியுள்ளது.

எனவே ஜனாதிபதியிடம் சந்திப்பிற்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக பிரதிய மைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது உடனடியாக குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.