சந்தீப் கிஷன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்மா. முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில், ஜேசன் சஞ்சய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேசன் சஞ்சயிடம், அப்பா விஜய்யின் நடிப்பில் ஒரு இயக்குநராக உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “படத்தில் அவருடைய நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படியான காட்சிகளில் அவர் மிகவும் இயல்பாக நடித்திருப்பார். அவர் உண்மையாகவே அவரைப்போலவே தான் காமெடி காட்சிகளில் நடித்திருப்பார். ஏனென்றால், அவருடைய சொந்த வாழ்க்கையிலும் அவர் அப்படியான நபர் தான். அவருக்குள் இருக்கும் அந்தச் சிறுபிள்ளைத்தனமான இயல்பை நான் அருகில் பார்த்திருக்கிறேன். இதனால் தான் எனக்கோ அல்லது பொதுவாக மற்ற திரைப்பட இயக்குநர்களுக்கோ அவரை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால், அந்தப் பரிமாணத்தை இன்னும் அதிகமாக வெளிக்கொண்டுவர நான் விரும்புவேன்” என பேசியுள்ளார்.
Leave a Reply