தாய்வான் நீரிணையைக் கடந்து சென்ற நியூசிலாந்து கடற்படை போர்க்கப்பல்கள்

சீனாவினால் உரிமை கோரப்பட்டு வரும் சர்ச்சைக்கூரிய தாய்வான் நீரிணைப் பாதையினூடாக நியூசிலாந்து கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க்கப்பல்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக நியூசிலாந்து பாதுகாப்புப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

‘தே மனா’ (Te Mana) என்ற கடற்படை கப்பலும் ‘ஆட்டேரோவா’ (Aotearoa) என்ற எரிபொருள் விநியோகக் கப்பலுமே இவ்வாறு தாய்வான் நீரிணையைக் கடந்து சென்றுள்ளன.

இந்தக் கடல்வழிப் பயணம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இது வழக்கமான ஒரு நடவடிக்கை மட்டுமே என்றும், இதனால் தங்களது மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவிடமிருந்து எந்தவொரு விரும்பத்தகாத எதிர்வினைகளும் எழாது என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் நீரிணையை சீனா தனது சொந்த கடல் பிராந்தியமாக உரிமை கோரி வரும் நிலையில், அமெரிக்கா, தாய்வான் மற்றும் ஏனைய நட்பு நாடுகள் அதனை சர்வதேசக் கடல்வழியாகவே கருதி வருகின்றன.

உலகின் மொத்த சரக்குக் கப்பல் போக்குவரத்தில் பாதியளவு இந்த நீரிணை வழியாகவே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *