பிச்சை போட மறுத்த பெண்; மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த யாசகர்; உத்தரப்பிரதேசத்தில் துணிகரம்

மும்பை புறநகரில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தைச் சேர்ந்த மோனிகா ரெய்னா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தனில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கி இருந்து மத சடங்குகளில் பங்கேற்று வருகிறார்.

மோனிகா மதுராவில் உள்ள ராதாகுண்ட் அருகே உள்ள கோவர்தன் பரிக்ரமா வழித்தடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் யாசகம் கேட்டார். ஆனால் மோனிகா யாசகம் கொடுக்க மறுத்தார். இதனால் யாசகம் கேட்டவர் அந்தப் பெண்ணை புதருக்குள் தள்ளி, கழுத்தை நெரிக்க முயன்றார்.

அதோடு அப்பெண்ணின் மூக்கைக் கடித்து அவர் அணிந்திருந்த மூக்குத்தியை எடுத்துக்கொண்டு யாசகம் கேட்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக அப்பெண் போலீஸில் புகார் செய்தார்.

அப்பெண் கொடுத்துள்ள புகாரில், யாசகம் கேட்ட நபர் மாலை 5 மணியளவில் தன்னை அணுகி பணம் கேட்டதாகவும், கொடுக்க மறுத்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும், வழியில் தொடர்ந்து தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் தன்னை புதரில் தள்ளிவிட்டு, மூக்கைக் கடிக்கும் முன் கழுத்தை நெரிக்க முயன்றார் என்றார்.

மேலும் தப்பியோடும்போது மூக்குத்தியை எடுத்து சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள மற்ற பக்தர்கள் அந்தப் பெண்ணைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து மதுரா போலீஸ் அதிகாரி ஷ்லோக் குமார் கூறுகையில், “அந்தப் பெண் அந்தப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​அந்த நபர் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தொடர்ந்து நடந்து சென்றபோது, ​​அந்த நபர் அப்பெண்ணைத் தாக்கி மூக்கில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *