துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது

துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.

விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மூவரும் காயமின்றி நலமுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலிருந்து வந்த அந்த விமானம், 3 லிபிய அரசியல் பிரமுகர்களை துருக்கிக்கு ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இவர்களில், திரிப்போலியைத் தளமாகக் கொண்ட பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அப்தெல்சலாம் ஜூபியின் சகோதரரான முகமது ஜூபியும் அடங்குவார்.

TC-AKF என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த வர்த்தக விமானமானது துருக்கி தொழிலதிபர் ஹம்டி அகினுக்குச் சொந்தமானது ஆகும்.

72 வயதான ஹம்டி அகின், அக்ஃபென் ஹோல்டிங்கின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஆவார்.

போர்ப்ஸ் நிறுவன மதிப்பீட்டின் படி, ஹம்டி அகின் 2.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் துருக்கியின் முதல் 10 பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *