அமெரிக்கா மீதான 9/11 தாக்குதல்.. ட்ரம்ப் கூறியது உண்மையா?

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை மோதி நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட நைன் டெவன் (9/11) பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து, வரும் செப்டம்பர் 11-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில் தான், நேற்றைய தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் 9/11 தாக்குதலின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ட்ரம்ப், 2001-ம் ஆண்டு தாக்குதல் நடந்த பின்னர் தனது கட்டுமானப் பணியாளர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) பகுதிக்குச் சென்றதாக தெரிவித்தார். தொடர்ந்து, அருகில் இருந்த ஒரு கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் தனது கைகளைப் பிடித்து அங்கிருந்து தூக்கி தன்னைக் காப்பாற்றியதாக கூறியதுடன் அவர்கள் மிகவும் வலிமையான எனவும் பாராட்டியிருந்தார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், ஒருபக்கம் இவர் பேசியது உண்மையா? என்ற கேள்வியும் எழுந்து வந்தது. இந்தச்சூழலில் தான், ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க ஊடகமான சி.என்.என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, Fact Check செய்த சிஎன்என், 9/11 தாக்குதல் நடைபெற்ற நாளில் டிரம்ப் உலக வர்த்தக மையம் அருகே இல்லை. அவர் மிட்டவுன் மேன்ஹாட்டன் பகுதியில் உள்ள ட்ரம்ப் டவர்-ல் இருந்தார் எனவும் அது கிரவுண்ட் ஜீரோ-வில் இருந்து பல மைல் தொலைவில் உள்ளது எனவும் தெரிவித்திருக்கிறது.

அதேபோல், டிரம்ப் குறிப்பிட்ட கட்டடத்திற்கு, 9/11 தாக்குதலுக்குப் பிறகு அவர் சென்றதாகவும், அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் அவரை அவசரமாக வெளியேற்றியதாகவும் உறுதிப்படுத்தும் பொதுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை CNN சுட்டிக்காட்டுகிறது. மேலும், கிரவுண்ட்-வில் மீட்புப் பணிகளில் தனது ஊழியர்கள் பெரிய அளவில் ஈடுபட்டதாக டிரம்ப் கடந்த காலங்களில் கூறியிருந்தாலும், அதற்கும் போதுமான ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், டிரம்ப் கூறிய சம்பவத்தில் சில உண்மையான கூறுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அவற்றை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் CNN குறிப்பிட்டுள்ளது. இதனால், 9/11 தாக்குதல் தொடர்பாக டிரம்ப் கூறியுள்ள இந்த புதிய கதை உண்மையா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, அல்-கொய்தா பயங்கரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை கடத்தியதுடன், அதை பயன்படுத்தி உலக வர்த்தக மையம், பென்டகன் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல்களில், 2,977 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். இதுவே, நைன் லெவன் (9/11) தாக்குதல் எனப்படுகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *