புரட்டி எடுத்த எட்வார்ட் புயல்.. அஞ்சி நடுங்கும் மக்கள்.. அடுத்தடுத்து யுத்தம் செய்யும் இயற்கை!

2026-ஆம் ஆண்டு என்பது இயற்கையின் மிகப்பெரிய கோபத்திற்குச் சாட்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில், உலக மக்கள் இயற்கைக்குச் செய்த துரோகத்தின் வெளிப்பாடாக, அனைத்து உலக நாடுகளையும், புயல், கனமழை, வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத் தீ ஆகிய இயற்கைப் பேரிடர்கள் தொடர்ச்சியாக தாக்கி, பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, உலகின் வல்லரசு நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில், அதிக அளவிலான பாதிப்புகளை இயற்கை அன்னை ஏற்படுத்தியிருக்கிறாள்.

இதுவரை, ஆர்தர், பெர்தா, கிறிஸ்டோபல், டாலி ஆகிய 4 புயல்கள், அமெரிக்காவை மூன்றே மாதங்களில் தாக்கியுள்ளன. இவ்வாறு தொடர்ச்சியாக புயல் பாதிப்புகளைச் சந்தித்து வரும் அமெரிக்காவில், எட்வார்ட் என்ற புயலும் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளது. அதாவது, அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதியின் தென்மேற்குக் கடற்கரைக்குச் சற்று தெற்கே நகர்ந்து வரும் எட்வார்ட் வெப்பமண்டலப் புயல், கிழக்கு டெக்சாஸ் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்சிகோ வளைகுடாவில் உள்ள வெதுவெதுப்பான நீர்ப்பரப்பு, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, இது கரையை நெருங்கும்போது மேலும் தீவிரமடையக்கூடும் என்று கூறப்படுகிறது. சில சமயங்களில், இது சூறாவளிப் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதனால் ஏற்படக்கூடிய கனமழை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் கரையை கடந்த பிறகு, உள்நோக்கி நகர்ந்து, செப்டம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்சாஸ் மற்றும் லூசியானாவின் கடற்கரைப் பகுதிகள்தான், இந்தப் புயலால் கடுமையான சேதங்களைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், டெக்சாஸின் சில பகுதிகளிலும், ஹூஸ்டன் மற்றும் தென்கிழக்கு டெக்சாஸ் பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *