எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டடப் பொறியாளரான அசோக் சரவணன் தனது எதிர்கால மனைவி ராதிகா வர்ஷிணிக்குத் திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தனது திருமணத்தை மறக்க முடியாததாக மாற்ற நினைத்த அசோக் சரவணன் தனது சகோதரியின் உதவியுடன் நிலவில் 1 ஏக்கர் நிலத்தை இணையம் மூலம் வாங்கி அதனை மனைவிக்கும் பரிசளிக்க முடிவு செய்துள்ளார்.

நிலவில் நிலம் விற்பனை செய்வதாகக் கூறி பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் இணையங்களில் பத்திரப்பதிவுச் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

இந்த இணையதளங்களில் நிலவில் 1 ஏக்கர் நிலத்தின் விலை சுமார் 3இலட்சத்து 068.40 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்இ 3 ஏக்கர் 5 ஏக்கர் மற்றும் 10 ஏக்கர் வாங்குபவர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

நிலவில் நிலம் வாங்குவது என்பது தொழில்நுட்ப ரீதியாக இணையதளங்களில் பணம் செலுத்திப் பத்திரச் சான்றிதழ் பெற முடிந்தாலும் சர்வதேச விண்வெளிச் சட்டத்தின்படி இது செல்லுபடியாகாது.

1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி நிலவு உட்பட எந்தவொரு விண்வெளிப் பொருளும் எந்தவொரு நாட்டிற்கும் அல்லது தனிநபருக்கும் சொந்தமானது அல்ல.

தனியார் அமைப்புகள் வழங்கும் இந்த நிலப் பத்திரங்கள் நினைவுக் பரிசுகளாகவோ அல்லது பொழுதுபோக்குச் சான்றிதழ்களாகவோ மட்டுமே கருதப்படுமே தவிர சட்டப்பூர்வமான நில உரிமையாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *