UNRWA மையத்தில் இஸ்ரேலிய சோதனையின் போது பாலஸ்தீன சிறுவன் சுடப்பட்டான்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள கஃப்ர் அகப் (Kafr Aqab) பகுதியில் இயங்கி வரும் UNRWA தொழிற்பயிற்சி மையத்தை இஸ்ரேலிய காவல்துறையும் எல்லை பாதுகாப்புப் படைகளும்  வாகனங்களுடன் முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இந்த மையம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களுக்குத் தொழில் கல்வி வழங்கி வருகிறது.

இந்தச் சோதனையின் போது நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 5 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு பாலஸ்தீன சிறுவன் சுடப்பட்டக் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த நடவடிக்கை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) தலைமையில் நடைபெற்றது. UN வளாகத்தின் மீது இஸ்ரேலிய கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், ஜெருசலேமிலோ அல்லது இஸ்ரேலிலோ UNRWA இயங்குவதற்கு “இடமில்லை” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 வளாகத்திற்குள் இருந்த சுமார் 40 UNRWA ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் மற்றும் UNRWA அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சுட்டிக்காட்டின.

 UNRWA நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து இஸ்ரேல் பாராளுமன்றம் (Knesset) இயற்றிய சட்டத்தைக் குறிப்பிட்டு, அந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் கைப்பற்றி புதிய கல்வி மையத்தைக் கட்ட உள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *