தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகிலுள்ள குவாமகுதா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு வீடொன்றுக்குள் புகுந்த ஆயுதமேந்திய மூவர், அங்கிருந்த 14 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நால்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் கர்ப்பிணியாக இருக்கலாம் எனக் கருதப்படும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், எதிரெதிர் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தாக்குதலாளிகள் தப்பிச் செல்வதற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குச் சொந்தமான வாகனத்திற்கும் தீ வைத்ததாக அங்கிருந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் தென் ஆப்பிரிக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *