பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும் பிற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின்போதும் திருக்குறளின் சிறப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உலகறியச் செய்து வருவதற்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் பரிசளித்ததை வைரமுத்து நினைவு கூர்ந்தார்.

குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது மொழியைக் கடந்து மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான தத்துவங்களை எடுத்துரைப்பதாலேயே பிரதமர் திருக்குறளைப் பரிசளித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

திருக்குறள் மதச்சார்பற்ற பண்பையும் உலகளாவிய மானுட மதிப்புகளையும் கொண்டுள்ளதால், அதனை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவித்தால், மதுரை மல்லிகைப் பூவோடும் சேலத்து மாம்பழக் கூடையோடும் டெல்லிக்கு நேரில் வந்து பிரதமரைப் பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

திருக்குறளுக்குத் தேசிய நூல் அந்தஸ்து வழங்குவது தமிழ் மொழிக்கும், ஒட்டுமொத்த இந்திய கலாசாரத்திற்கும் உலகளவில் மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *