டொராண்டோ அமெரிக்கத் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகக் (U.S. Consulate) கட்டிடத்தின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதே தூதரகத்தின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இன்று அதிகாலை சுமார் 4:46 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தூதரகக் கட்டிடத்தின் வெளிப்பகுதி  சேதமடைந்துள்ளது. ஒரு வெற்றுத் தோட்டா சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது.

தூதரகத்தின் உள்ளே பாதுகாப்பு ஊழியர்கள் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் நடந்த முந்தைய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, இந்த தூதரகத்தின் வெளியே 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு உடனடியாகச் செயல்பட்டபோது, நம்பர் பிளேட் இல்லாத வெள்ளை நிற ஹோண்டா அக்கார்ட்  கார் அங்கிருந்து அதிவேகமாகத் தப்பிச் சென்றதைக் கண்டார்.டொராண்டோ போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர்.

எனினும், கார் மணிக்கு 140 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் சென்றதால் பொதுப் பாதுகாப்பு கருதி துரத்துவதை நிறுத்திக் கொண்டனர். சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதே அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 10 ஆம் தேதியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அது ஒரு ‘தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவம்’ என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது தொடர்பாக 3 இளைஞர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து டொராண்டோ போலீசார் , மற்றும் கனடிய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *