பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்புல்பே – பலாங்கொடை, ரத்தனகொல்லவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

அதனை அணைக்கும் செயற்பாடுகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர்  ஈடுபடுத்தப்பட்டது.

விரைவாகச் செயற்பட்ட விமானப்படை, வானிலிருந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு பெல் 412 ரக ஹெலிகொப்டரை பம்பி பக்கெட் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பியது.

படையினரின் இந்த தீவிர நடவடிக்கையால் வனப்பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டது.