தாக்குதலாளிகளை கைது செய்ய தவறின் வீதியில் இறங்கி போராடுவோம்!

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி , வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னதாக நிறுத்த அரசு தவறுமாயின் ஊடகவியலாளர்களாகிய நாம் வீதிகளில் இறங்கி போராட பின்னிற்கப்போவதில்லையென யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது.

 

யாழ்ப்பாண ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சுதந்திர ஊடக அமைப்பு காவல்துறை அதிபருடன் கொழும்பில் நேரில் பேச்சுக்களை நடாத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த சுதந்திர ஊடக இயக்க தலைவர்களுடன் யாழ்.ஊடக அமையம் தம்பித்துரை பிரதீபனின் வதிவிடம் மீதான தாக்குதல் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் தனது வன்மையான கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.

ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சி தலைவரது கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டிருந்ததுடன் சர்வதேச ஊடக அமைப்புக்கள் மற்றும் கொழும்பிலுள்ள தூதர வட்டாரங்களிற்கும் அறிக்கையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பு திரும்பிய சுதந்திர ஊடக இயக்க பிரதிநிதிகள் நேரடியாக உயர்மட்ட சந்திப்புக்களை நடாத்தியுள்ளனர்.

இதனிடையே உயர்மட்ட சந்திப்புக்களில் தாக்குதலின் உண்மை தன்மையினை கண்டறிய கால அவகாசம் கோரப்பட்டுள்ளதுடன் நேரடியாக விசாரணைக்குழுவொன்றை தனித்து நியமிப்பது தொடர்பிலும் பரிசிலீப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டதொரு இடைவெளியின் பின்னராக  வடக்கில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் ஊடகவியலாளர் வதிவிடம் மீதான தாக்குதல் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

எனவே சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து ,உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னதாக நிறுத்த வேண்டும். தவறின் ஊடகவியலாளர்களாகிய நாம் வீதிகளில் இறங்கி போராட பின்னிற்கப்போவதில்லையென ஊடக அமையம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.