பொன். சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்!

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.

 

உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்ததுடன் அகவணக்கமும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சி பேதமற்று பலரும் கலந்து கொண்டனர்.

கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவின் சார்பில் விந்தன் கனகரட்ணம்,  வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் க.சர்வேஸ்வரன், ஈழ சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக தியாகி பொன் சிவகுமாரனது சமாதி அமைந்துள்ள வேம்பிராய் மயானத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.