யாழில். சேமக்காலைக்கு பெண்ணை அழைத்து சென்று உயிருடன் எரித்துக்கொன்ற இளைஞன்!

சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன் , பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார்.

 

சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன் , பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட போது , இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதனை அவதானித்த அயலவர்கள் ஓடி சென்று தீயினை அனைத்து , பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.