நான் பொது வேட்பாளருக்கு மாறானவன்!

மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் , அது நடக்காது. மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி, வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

நான் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில் எங்கட தரப்பில் இருந்து சொன்னவனும் நான் தான்.

அதாவது பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும் அதற்கான காரணங்களையும் நான் கூறியிருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முதலில் முடங்கும்.

கடந்த தேர்தலில் தேசியத்திற்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும். இப்ப மேலும் நாங்கள் பிளவுபட்டு இருக்கிற போது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை ஐனாதிபதியாக்குவதற்குத் தான் இவர்கள் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை.

பொது வேட்பாளர் தொடர்பில், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் கட்சி உறுப்பினர்கள் தனி தனிய இது பற்றி பேசி வருகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் நாங்கள் பேசியிருந்தோம்.

கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது கட்சி என்று சொல்லி சில சில பேர்  தனித் தனியாகவும் பேசியிருக்கலாம். அப்படி பேசி இருப்பதாகத் தான் செய்திகளும் வருகிறது. எனினும் கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்வோம்.

மேலும் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை பணிய வைக்கலாம் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். இவரை போல எத்தனையோ பேரை நாங்கள் கண்டிருக்கிறோம். ஒரு பாரம்பரிய கட்சிகயை பற்றி அப்படியெல்லாம் பேசுவதா?

அதுமட்டுமல்ல யாழ்ப்பாண மக்களை உசுப்பேற்றி பணிய வைப்பதாகவும் கூறியிருக்கிறார். அப்படி உசுப்பேற்றி யாழ்ப்பாண மக்களை பணிய வைக்க முடியுமா? ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்க்காக எங்கள் கட்சியை பற்றி எதையாவது கதைத்துவிட்டு செல்வதா?

மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் அது நடக்காது என மேலும் தெரிவித்தார்.