ஜனாதிபதியின் நிகழ்வை தேர்தல் பரப்புரை நிகழ்வாக நடத்த முயற்சி!

ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தினை சிலர் தேர்தல் பரப்புரை நிகழ்வாக மாற்ற முனைந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வடமாகாணத்திற்கு விஜயம் செய்து கலந்து கொண்ட சில நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். அந்நிகழ்வுகள் அரச நிகழ்வுகள் ஆகும். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.

வடமாகாணத்தில் ஜனாதிபதி திறந்து வைத்த வைத்தியசாலைகளில் கட்டடங்கள் வடமாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பா. சாத்தியலிங்கத்தின் முயற்சியால் அமையப்பெற்றது

எங்களுடைய வடமாகாண சபையில் , எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் சுகாதார அமைச்சரின் காலத்தில் வந்த திட்டத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொண்டோம். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் சாத்தியலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு இடம்பெற்றது. அது அமைச்சரின் செயலுக்கு கிடைத்த பாராட்டு ஆகும்.

மற்றைய நிகழ்வுகள் மக்களுக்கான காணி உறுதிகளை கையளிக்கும் நிகழ்வு. அந்த காணிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, பொர்மிட் காணிகளாக இருந்தவற்றுக்கும், சில மட்டுப்பாடுகளுடன் காணப்பட்ட காணிகளுக்கும் , அவற்றின் முழு உரித்தையும் அந்த காணிகளில் வாழும் மக்களுக்கு கையளிக்கும் முகமாக உறுதிகள் வழங்கும் நிகழ்வில் நாம் கலந்து கொண்டோம்.

தற்போது அந்த மக்களுக்கு  அவர்கள் வசித்த காணிக்கான முழு உரித்தும் வழங்கப்பட்டுள்ளன. அதனால் , அந்த காணிகளை வெளிநபர்களுக்கு , பல்தேசிய கம்பெனிகளுக்கு விற்பதோ , ஈடு வைத்தல் போன்ற செயல்களில் அந்த மக்கள் ஈடுபட கூடாது என மக்களுக்கு தெரிவித்து இருந்தோம்

ஜனாதிபதியின் இந்த நிகழ்வுகளை சிலர் தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்த முயன்றார்கள். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிகிற நிலையில் , ஜனாதிபதி கலந்து கொண்ட அரச நிகழ்வினை தேர்தல் பரப்புரை நிகழ்வாக மாற்ற கூடாது என யாழ்.போதனா வைத்தியசாலை கட்டட திறப்பு விழாவின் போது உரையாற்றும் போது கூறினேன்.

இறுதியாக கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தேர்தல் பரப்புரை நிகழ்வாக நடத்த முற்பட்டமையை சுட்டிக்காட்டினேன் என தெரிவித்தார்.