யாழில். மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல் – தடுக்க சென்ற மச்சான் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு!

தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதனை அவதானித்த இளைஞன் இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க முற்பட்ட வேளை அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்து மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.