திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் பொலிசாரினால், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது.
நீதிமன்ற தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்த குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply