ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajenthiran) தெரிவித்துள்ளார்.
ஐனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளரை நிறுத்துவது மற்றும் பகிஸ்கரிப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
75 வருடங்களாக ஆட்சிக்கு வந்த பேரினவாத தலைவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடைய நலன்கள் தொடர்பில் கருத்தில் கொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் மக்களுடைய வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதையே முதன்மையாகக் கொண்டுள்ளனர்.சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடைய உரிமைகளை அங்கீகரிப்பதற்கோ அவர்களை சுதந்திரமாக வாழ விடுவதற்கு தயாராக இல்லை. இந்தநிலையில், தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலிலிருந்து முற்றாக விலகியிருப்பதன் மூலமே தமிழ் மக்கள் தமக்கான உரிமையை நிலை நாட்ட முடியும் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடு.
தமிழ் மக்களது ஆதரவோடு வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைத்து சர்வதேச குற்ற விசாரணை என்ற பொறிமுறைக்குள் செல்லாது உள்ளக விசாரணைக்குள் முடக்கி தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற செயற்பாட்டையே முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply